நம் சந்தை - சிறந்த வேளாண் கூட்டுறவு பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கோத்தகிரி சண்முகநாதன் உருவாக்கியுள்ள நம்ம ஊரு சந்தை தேசத்துக்கே முன்னுதாரணமாகியிருக்கிறது. மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்து இருளர்கள் சேகரித்துவரும் தேனையும், இரவு பகல் பாராமல் குறும்பர்கள் வரைந்துதரும் ஓவியங்களையும் மலிவாக வாங்கி கொள்ளை விலைக்கு விற்று பணம் பார்த்தார்கள் பலர். இதைக்கண்டு வருந்திய சண்முகநாதன் இரண்டாண்டுகள் அந்த மக்களோடு பழகி அவர்கள் சேகரித்துத்தரும் பொருள்களின் மகத்துவத்தை உணர வைத்தார். அந்த மக்களே விலைவைத்து விற்கும் வகையில் 'நம்ம ஊரு சந்தை' என்ற சொசைட்டியை உருவாக்கினார். குறும்பர், கோத்தர், இருளர், ஆதிதிராவிடர்கள் மற்றும் நில உடமை மறுக்கப்பட்ட தாயகம் திரும்பியவர்கள் நம்ம ஊரு சந்தையின் அங்கத்தினராக்கப்பட்டார்கள். இசைக்கருவிகள், ஓவியங்களென உற்பத்திக்கும் விற்பனைக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து வரையறுக்கப்பட்ட நிறுவனம் போல செயல்படுகிறது...