சிறந்த வேளாண் ஊடகவியலாளர் – அபர்ணா கார்த்திகேயன்.
874
post-template-default,single,single-post,postid-874,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,no_animation_on_touch,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

சிறந்த வேளாண் ஊடகவியலாளர் – அபர்ணா கார்த்திகேயன்.

அடிப்படையில் விலங்கியல் இளநிலை பட்டப் படிப்பை முடித்தவர் அபர்ணா கார்த்திகேயன். கணவர் வேலையின் பொருட்டு பல ஊர்களில் தங்கியிருந்தவர் 2013 ஆம் ஆண்டு நிரந்தரமாகச் சென்னையில் குடியேறினார்.

சென்னை வந்தப் பிறகு, தி இந்து ஆங்கிலப் பத்திரிகையில் சென்னையில் இருக்கும் சராசரி மக்களின் (ஆட்டோ ஓட்டுநர், பீச்சில் ரங்கராட்டினம் சுற்றுபவர், பஜ்ஜி சுடும் அம்மா) வாழ்கைகளைப் பற்றி எழுதத் துவங்கினார்.

இந்நிலையில் விவசாயிகளின் பிரச்சனையைப் பற்றியும் அவர்களின் தற்கொலை பற்றியும் தொடர்ந்து எழுதிவரும் சாய்நாத் அவர்கள் எழுதிய பெண் விவசாயி பற்றிய ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு அவருக்கு ஒரு ரசிகையாக மின்னஞ்சல் அனுப்பினார்.

விவசாயிகள் என்றாலே ஆண்கள், வயதானவர்கள் தான், அவர்கள் டிராக்டர் ஓட்டுவார்கள் என்பன போன்ற பொது சிந்தனை உள்ளபோது அதை முழுக்க முழுக்க உடைத்து பெண்கள்தான் விவசாயித்தில் 90% என சாய்நாத் எழுதியது இவருக்கு விவசாயம் பற்றிய வேறு ஒரு கோணத்தைத் தந்தது.

சாய்நாத் எழுதிய கட்டுரையின் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல கிராமங்களுக்குச் சென்று பெண் விவசாயிகளின் வாழ்க்கையையும் கலாச்சாரத்தையும் தொடர்ந்து ஆவணப்படுத்தி, 2019 ஆம் ஆண்டு ஒன்பது ரூபாய், ஒரு மணி நேரம் என்ற புத்தகத்தை எழுதினார்.

”ஒரு நாளைக்கு 2000 பேர் விவசாயத்தை விட்டு வெளியேறுவதாக சாய்நாத் குறிப்பிடுகிறார். இதே போல எதாவது ஒரு துறையில் வேலையை விட்டு வெளியேறினால் அது எல்லா ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகிருக்கும் ஆனால் விவசாயத்தில் அது எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இதை எல்லாம் ஆவணப்படுத்த வேண்டும்” என்கிறார் அபர்ணா. மேலும் இங்கு மிகத் தீவிரமான, மிகையான விஷயங்கள் மட்டுமே பேசு பொருளாவதாகக் கருதுகிறார்.

விவசாயிகள் பெரும் சாதனை அல்லது பெரும் வீழ்ச்சி என்றால் மட்டும் பேசுகிறார்கள். ஆனால் இடைப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் 90% விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றி பேசுவதில்லை. அதைத் தான் நான் ஆவணப்படுத்தி வருகிறேன் என்கிறார் அபர்ணா.

இதுவரை மஞ்சள், மல்லிகைப் பூ, எள், பலாப்பழம், மிளகாய், உப்பு, ராகி போன்ற பொருட்களின் உற்பத்தி அதைச் செய்யும் விவசாயிகள் அவர்களைப் பற்றிய வாழ்வியல் ஆய்வு கட்டுரைகளை PARI என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகமெங்கும் அபர்ணாவின் கட்டுரைகளை வாசிக்கின்றனர்.

அபர்ணா பேசும் போது, “என்னால் வெகுஜன பத்திரிகையில் எழுத முடியவில்லை. 400 வார்த்தைகளில் ஒரு கட்டுரை கேட்கிறார்கள். ஒருவர் வாழ்க்கையை எப்படி 400 வார்த்தைகளில் எழுத முடியும். அதனால்
இணையத்தளத்தில் வெளியிடுகிறேன். ஒரு கட்டுரை எழுத குறைந்தபட்சம் 5 முதல் 6 மாதங்கள் ஆகின்றன. தொடர்ந்து விவசாயிகளைச் சந்திப்பது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், ஏற்கனவே அதைப் பற்றி எழுதிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் இப்படிப் பல கட்ட முயற்சியில் வரும் ஆய்வை எப்படி 400 வார்த்தைளில் சுருக்க முடியும் எனக் கேட்கிறார் அபர்ணா.

நாட்டு மாடுகள் நிலை, அரிவாளின் வரலாறு, நெல் விவசாயிகள், சிறுதானிய விவசாயிகள் இப்படி ஒவ்வொன்றைப் பற்றியும் ஆய்வுகளோடும், தரவுகளோடும் கட்டுரைகள் எழுதி வருகிறார். இங்கு கொள்கை அளவில் எல்லாம் சரியாக இருக்கும். ஆனால் விவசாயிகளுக்கு வருடா வருடம் பலப் பிரச்சனைகள் வருது. இந்த வருடம் நல்ல உற்பத்தி வந்தாலும் அடுத்த வருடம் குறைகிறது.

வறட்சியான மாவட்டம் என அறிவிக்கும் பகுதிக்கு பக்கத்து கிராமங்களில் நல்ல விளைச்சல் உள்ளது. இப்படி ஒரு இடத்துக்கும் இன்னொரு இடத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும் போது எப்படி ஒரே மாதிரியான தீரு சரியாக இருக்கும் என்பதே அபர்ணாவின் கவலை. இங்கு உற்பத்தி செலவு அதிகமாகிறது. அதே நேரத்தில் மிடில் மேன்கள் எல்லோரும் இலட்சாதிபதிகளாக இல்லை இருந்தாலும் வாடிக்கையாளர் பக்கம் விலை வாசி உயர்வு வருகிறது. அது எப்படி ஏன் என ஆதாரத்தோடு எழுத வேண்டும் என்பதால் எழுதுகிறேன் என்கிறார்.

தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலை பற்றி ஒன்றிரண்டு தமிழ் பத்திரிகைகளில் வருகின்றன. Where is English coverage?. பிரச்சினைகளை தமிழ்நாட்டை தாண்டி எடுத்துச் செல்ல இதை எல்லாம் ஆங்கிலத்தில் கொண்டு செல்வது அவசியம் என்று நினைக்கிறார் அபர்ணா.

மல்லிகையை பற்றி ஆராய்ச்சி கட்டுரைக்காக திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி பகுதிகளுக்குப் பயணம் செய்து மல்லிகைப் பூ விவசாயத் தொழிலாளர்களின் நிலையையும் சென்ட் தயாரிப்பவர்கள், பூ கட்டும் கூலிகளின் நிலையையும் பதிவு செய்துள்ளார்.

பூ கட்டும் தொழிலாளிக்கு 2000 பூக்கள் தொடுத்தால்தான் 30 ரூபாய் கூலி கிடைக்கிறது. 6000 பூக்கள் தொடுத்தால்தான் அவர்களுக்கு 100 ரூபாய் கிடைக்கும் இதை கட்டித் தான் அவர்கள் வாழ்கிறார்கள் அதுதான் அவர்களுக்கு தெரியும் என்கிறார்.

ஒரு பெண் விவசாயி கிணறு வெட்ட வங்கியில் கடன் கேட்டால் கொடுக்கவில்லை. ஆனால் அவர்களே கார் வாங்கிக்குங்க கடன் தருகிறோம் என்கிறார்கள். காரணம் கடனை திரும்பக் கட்டவில்லை என்றால் காரை எடுத்துக் கொள்ளலாம், கிணற்றை அப்படி எடுத்துக் கொள்ள முடியாதே அதானே காரணம்
என்கிறார் அபர்ணா.

ஒரு கணவரை இழந்த பெண் விவசாயி வங்கிக்குக் கடன் கேட்கச் சென்றால் விவசாயி என்றவுடன் எங்களுக்கு ஒரு நாற்காலி கூட போடாமல் ஓரமாக நிற்க வைத்தார்கள் நாங்கள் என்ன அந்தளவுக்கு மோசமான ஆட்களா என அப்பெண் விவசாயி கேட்டபோது தன்னால் பதில் எதுவும் சொல்ல முடியாமல்
நின்றதாக கூறுகிறார்.

அதாவது ஒரு பக்கம் விவசாயிகள்தான் எல்லாமே என்கிறோம். ஆனால் நடைமுறையில் பெண்களை, பெண் விவசாயிகளை நாம் எப்படி மதிக்கிறோம் என்பதற்கு இதெல்லாம் ஆதாரம் என்கிறார் அபர்ணா.

இவர் விவசாயிகள் விளைப் பொருட்களைத் தாண்டி பெரண்டை போன்ற உணவுப் பொருட்கள் விவசாயிகளின் வாழ்வில், பெண்களின் வாழ்வில் எந்தளவுக்கு உணவு ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியம் வாய்ந்தது என்ற கட்டுரையையும் எழுதியுள்ளார்.

இவருடைய கட்டுரையால் பலப் பெண் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் முற்றிலும் மாறியிருக்கிறது. அதோடு இவர் தன்னுடைய கட்டுரையை TNAU, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், சுவிட்சர்லாந்து, டெல்லி போன்ற மூன்று சர்வதேச கருத்தரங்குகளில் எனப் பல இடங்களில் வழங்கி இருக்கிறார்.

இவரது கட்டுரைகள் தி இந்து, தி கேரவான், தி வயர், ஸ்க்ரோல் இன் போன்ற பல பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வெளியாகி உள்ளன. குழந்தைகளுக்காக kali wants to dance, cat’s egg, Looking for Laddoo, No Nonsense Nandhini, woof ஆகிய 5 நூல்களையும் எழுதியுள்ளார்.

இப்படித் தொடர்ந்து விவசாயிகளின் பிரச்சினைகள், விவசாயத்தில் பெண்களின் நிலை, இன்றைய விவசாயம், சிறுதானியங்கள், உப்பு போன்ற பல முக்கியமான விஷயங்கள் குறித்து ஆங்கிலத்தில் ஆய்வு கட்டுரைகளாக எழுதி உலகமெங்கும் கொண்டுச் சேர்த்து வருகிறார் அபர்ணா கார்த்திகேயன்.

அவரது இந்த சேவைக்காக, அவரைப் பாராட்டி சிறந்த வேளாண் ஊடகவியலாளருக்கான உழவர் விருதும் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.