02 Feb உழவர் விருதுகள் – 2023 – திருமிகு.சுந்தர் என்கிற சண்முகசுந்தரம் – மரபு விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்கம்
புதுவையின் ஏம்பலம் கிராமத்தில் வசிக்கும் இந்த 25 வயது இளைஞன், கைவிட்டுப்போன ஐநூறுக்கும் மேற்பட்ட மண் சார்ந்த மரபு விதைகளை மீட்டெடுத்து மீண்டும் நம் நிலங்களில் உயிர்ப்பித்திருக்கிறார்.
விஷூவல் கம்யூனிகேஷன் படித்த சுந்தர், ஓர் ஆவணப்படத்துக்காக தொடங்கிய தேடல், நம்மாழ்வாரிடம் கொண்டுபோய் சேர்த்திருக்கிறது. அந்த சந்திப்புதான் சுந்தரின் பாதையை இயற்கையின் பக்கம் திருப்பியது. விதையை முன்வைத்து நடக்கும் வேளாண் அரசியலையும் நம் பாரம்பர்ய விதைகளின் தனித்தன்மைகளையும் நம்மாழ்வார் விவரிக்க, நஞ்சில்லா விவசாயம் செய்ய முடிவெடுத்தார் சுந்தர். ஆனால் அதற்குப் போதுமான நிலமில்லை. தன் வீட்டையொட்டியிருக்கும் சின்ன இடத்தில், காய்கறிகளைப் பயிரிட நினைத்த சுந்தருக்குக் கிடைத்தவையெல்லாம் வீரியரக விதைகள். மரபு விதைகளுக்கான அவரது பயணம் அப்போதுதான் தொடங்கியது.
தமிழகம் முழுவதும் அலைந்து திரிந்து 30 மரபு காய்கறி விதைகளைச் சேகரித்த சுந்தர், தன் நிலத்தில் அவற்றை பயிரிட்டுப் பெருக்கி, “மரபு விதை தேவைப்படுவோர் என்னிடம் விலையின்றிப் பெற்றுக்கொள்ளலாம். அதை விளைவித்து நான் தந்ததைவிட கூடுதலாக விதையெடுத்துத் தரவேண்டும்’ என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்தார். இந்த செயல்பாடு தேசம் கடந்து அவரைக்
கொண்டு சென்றது. மரபு வேளாண் ஆர்வலர்கள் பலரும் சுந்தரோடு கைகோக்க மரபு விதைச் சேகரிப்பு ஒரு மாபெரும் இயக்கமாக வளர்ந்தது. இன்று சுந்தர் விதைத்த விதையால் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலத்தில் மரபுக் காய்கறிகள் விளைகின்றன. நானூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த விதைப்பகிர்வு சங்கிலியில் இணைந்து தீவிரமாக மரபு விதைகளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
மரபு விதை கண்காட்சிகள், மரபுவழி தோட்டங்கள் அமைத்தல், பள்ளிகளில் நாட்டுவிதைத் தோட்டங்கள் உருவாக்குதல், இணைய வழி வேளாண் வகுப்புகள் என சுந்தரின் தலைமையில் இயங்கும் ‘உழுது உண் மரபு விதைகள் சேகரிப்பு குழு’ போற்றுதலுக்குரிய பல செயல்பாடுகளை முன்னெடுக்கிறது.
‘தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் ஆர்வமுள்ள விதை சேகரிப்பாளர்களை இணைத்து சுந்தர் உருவாக்கியுள்ள அமைப்பு, வேலூர் சமுதாய விதை வங்கி என்ற மரபு விதை வங்கியைத் தொடங்கி விவசாயிகளுக்கு இலவசமாகவும் குறைந்த விலையிலும் மரபு விதைகளை வழங்கிவருகிறது.
இவர் சேவையை பாராட்டி “மரபு விதைகள் மீட்டெடுத்தல் மற்றும் பரவலாக்க்கம்” க்கான உழவர் விருதும் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
No Comments