உழவர் விருதுகள் – 2022 – நம் அனுமன் நதி சீரமைப்பு குழு
772
post-template-default,single,single-post,postid-772,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர் விருதுகள் – 2022 – நம் அனுமன் நதி சீரமைப்பு குழு

நம் அனுமன் நதி  சீரமைப்பு குழு – நீர் நிலைகளை மீட்டெடுத்தல்

30 ஆண்டுகாலம் தண்ணீரையே பார்க்காத ஒரு நதியை மீட்டு உயிர் தந்திருக்கிறது மக்களின் ஒற்றுமை. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி  32 கிலோ மீட்டர் நீளத்துக்கு 11 கிராமங்களின் உயிர் நனைத்து ஒடி  மன்னார் வளைகுடாவில் கலக்கிறது அனுமன் நதி.  இருதிசைகளிலும் 400 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பில் மூழ்கி சுருங்கி பொழிவிழந்து போனது இந்த நதி. மரணித்து வரும் நதியை மீட்க  ஜாதி, மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு கரம் கோர்த்தார்கள் 11 கிராமங்களின் தன்னார்வலர்கள்.

கொரோனாவினால் ஊரே முடங்கிக் கிடந்த நேரத்தில் தொடங்கியது பணி. அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர். சக்திநாதன் வழிகாட்ட,  மாவட்ட நிர்வாகம் தோள் கொடுக்க இளைஞர்கள் களத்தில் இறங்கினார்கள். DGPS சர்வே எனப்படும் தொழில் நுட்ப ஆய்வை மேற்கொண்டு ஆற்றின் இரு புறமும் 64 கிலோ மீட்டருக்கு எல்லையை வரையறுத்து கற்கள் ஊன்றப்பட்டன. தங்களுக்குள்ளாகவே பொருள் திரட்டி ஆற்றுக்குளும் கரைகளிலும்  இருந்த முட்புதர்களை அகற்றினார்கள். 400க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகளை சுமுகமாக அகற்றி அனுமன் நதியின் முழு வடிவத்தையும் மீட்டெடுத்திருக்கிறது  நம் அனுமன் நதி  சீரமைப்பு குழு. மக்களின் செயல்கண்ட அரசு, சீரமைப்பு பணிகளுக்கு இயந்திரங்கள் அளிக்க நதி முழுப்பொழிவு பெற்றிருக்கிறது.

வடமேற்கு பருவமழை காலத்தில் நிரம்பியோடிய அனுமன் நதி, தன்னை நம்பியிருக்கும் 47 குளங்களையும் தளும்ப தளும்ப நிறைத்திருக்கிறது. அவைமட்டுமின்றி 11 கிராம மக்களும் இணைந்து தங்கள் பகுதிகளில் ஈரமே பார்க்காமல் விளையாட்டு மைதானங்களாகிப்போன 18 குளங்களையும் கூடுதலாக நிரப்பியிருக்கிறார்கள்.

வறண்டு கிடந்த ஒரு நதிக்கு உயிர் கொடுத்ததுமூலம் 1000 அடிக்கு மேல் சென்றுவிட்ட நிலத்தடி நீரை 5 அடிக்கு மீட்டெடுத்திருக்கிறது நம் அனுமன் நதி  சீரமைப்பு குழு. இளைஞர்கள் கரம் இணைந்தால் எதையும் செய்யமுடியும் என்ற நம்பிக்கையை விதைத்ததற்காக நம் அனுமன் நதி  சீரமைப்பு குழுவைப் பாராட்டிப் நீர் நிலைகளை மீட்டெடுத்தலுக்கான உழவர் விருதும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

No Comments

Post A Comment