02 Feb உழவர் விருதுகள் – 2023 – கீழ் அத்திவாக்கம் பெண்கள்
கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாய கூட்டுறவு குழு – சிறந்த வேளாண் கூட்டுறவு அமைப்பு.
விவசாயம் லாபம் தரும் தொழிலல்ல என்ற கற்பிதம்தான் இளைய தலைமுறையை விளைநிலங்களை விட்டு விலக வைக்கிறது. திட்டமிட்ட உழைப்பும் தொழில்நுட்ப அறிவும் இருந்தால் வேளாண்மையிலும் லட்சங்களை
ஈட்டலாம் என்ற நம்பிக்கையை தங்கள் செயல்வழி விதைக்கிறார்கள் அத்திவாக்கத்தை சேர்ந்த இந்தப் பெண்கள்.
2015 ஆம் ஆண்டில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்துக்கு அருகிலிருக்கும் கீழ் அத்திவாக்கத்தை சேர்ந்த 15 பெண்களை ஒருங்கிணைத்து ‘கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாயக் கூட்டுறவுக் குழு’ என்ற சிறு அமைப்பொன்றை உருவாக்கியது Human Resource Development Foundation என்ற அமைப்பு.
சாதி, மத பேதங்களை கடந்து, வேளாண்குடியாக கரம்கோர்த்து ஒரு தரிசு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யத் தொடங்கியது இந்தக்குழு. ஒருபோகம் மட்டுமே விளைச்சல் தந்த அந்த வானம் பார்த்த பூமியை முப்போக விளைநிலமாக மாற்ற, கடனுதவி பெற்று ஒரு கிணறு வெட்டியது இந்தக் கூட்டுறவுக்குழு. கிணற்றில் சுரந்த நீர், நிலத்தை முக்காலமும் விளையும் பசும்பூமியாக மாற்றியது. நிலக்கடலை, பாரம்பர்ய நெல் ரகங்கள், வெண்டை, பூசணி, சுரைக்காய், உளுந்து, பச்சைப்பயிறு, தக்காளி, முள்ளங்கி, கத்தரிக்காய், மிளகாயென அந்தச் சின்ன நிலத்தில் பெருமகசூலெடுத்த இந்தப்பெண்கள், பெற்ற கடனையடைத்துவிட்டு தாங்கள் விளைவிக்கும் நல்லுணவை சந்தையிலும் விற்கிறார்கள். தானுண்டு, தன் குடும்பமுண்டு என்றிருந்த பெண்களை, மண்ணின் தேவையறிந்து நஞ்சில்லா இடுபொருள்கள் தயாரிக்கும் அளவுக்கு வேளாண் நிபுணர்களாக மாற்றியிருக்கிறது காலம்.
மூத்த விவசாயிகளே விதைகளுக்காக நிறுவனங்களை நாடிநிற்க, இந்த வேளாண் பெண்கள் தங்களுக்குத் தேவையான விதைகளை மட்டுமின்றி தங்கள் கிராமத்து விவசாயிகளுக்கும் தரமான விதைகளை உற்பத்தி செய்து தருகிறார்கள். வாரம் ஒரு பெண் சாகுபடிப்பணிக்குப் பொறுப்பேற்றுக்கொள்வது, மாதம் ஒரு கூட்டம் நடத்தி அடுத்தகட்ட பணிகளைத் திட்டமிடுவது, கிடைக்கும் பணத்தைச் சேமித்து தேவையிருப்பவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது என வேளாண்மை அறிவு மட்டுமின்றி மேலாண்மை அறிவோடும் இயங்கும் இந்தப்பெண்களைப் பார்த்து ரசாயன உரங்களைக் கொட்டி வேளாண்மை செய்த பலர் இயற்கை வேளாண்மையின் பக்கம் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெருமையும் பெருமிதமுமான மாற்றம்.
பெண்கள் இணைந்தால் ஊர்க்கதை பேசுவார்கள் என்று காலம் காலமாகச் சொல்லப்படும் அபத்த வழக்கை மாற்றி, பெண்கள் இணைந்தால் ஊரையே மாற்றுவார்கள் என்று நிரூபித்த ‘கீழ் அத்திவாக்கம் பெண்கள் இயற்கை விவசாயக் கூட்டுறவுக் குழு’வை பாராட்டி பணியை ஊக்கப்படுத்தி “சிறந்த வேளாண் கூட்டுறவு அமைப்பு” க்கான உழவர் விருதும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
No Comments