உழவர் விருதுகள் – 2022 – சண்முகநாதன்
758
post-template-default,single,single-post,postid-758,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

உழவர் விருதுகள் – 2022 – சண்முகநாதன்

நம் சந்தை – சிறந்த வேளாண் கூட்டுறவு

பழங்குடி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கோத்தகிரி சண்முகநாதன்  உருவாக்கியுள்ள நம்ம ஊரு சந்தை தேசத்துக்கே முன்னுதாரணமாகியிருக்கிறது. மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிந்து இருளர்கள் சேகரித்துவரும் தேனையும், இரவு பகல் பாராமல் குறும்பர்கள் வரைந்துதரும் ஓவியங்களையும் மலிவாக வாங்கி கொள்ளை விலைக்கு விற்று பணம் பார்த்தார்கள் பலர். இதைக்கண்டு வருந்திய  சண்முகநாதன் இரண்டாண்டுகள் அந்த மக்களோடு பழகி அவர்கள் சேகரித்துத்தரும் பொருள்களின் மகத்துவத்தை உணர வைத்தார். அந்த மக்களே விலைவைத்து விற்கும் வகையில் ‘நம்ம ஊரு சந்தை’ என்ற சொசைட்டியை உருவாக்கினார்.  குறும்பர், கோத்தர், இருளர், ஆதிதிராவிடர்கள் மற்றும் நில உடமை மறுக்கப்பட்ட தாயகம் திரும்பியவர்கள் நம்ம ஊரு சந்தையின் அங்கத்தினராக்கப்பட்டார்கள். இசைக்கருவிகள், ஓவியங்களென உற்பத்திக்கும் விற்பனைக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைத்து வரையறுக்கப்பட்ட நிறுவனம் போல செயல்படுகிறது நம்ம ஊரு சந்தை.

 பெங்களூருவில் 60 வீடுகள் கொண்ட ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வீடாகச் சென்று, பொருள்களின் தரம் சொல்லி முன்பணம் பெற்று நம்ம ஊரு சந்தைக்கான முதலீட்டைத் திரட்டியது வெற்றிக்கான முதல்படி. வணிகர்கள் 250 ரூபாய்க்கு வாங்கி 1200 ரூபாய்க்கு விற்ற மலைத்தேனை  450 ரூபாய்க்கு  வாங்கி, 650 ரூபாய்க்கு விற்கிறது நம்ம ஊரு சந்தை. உற்பத்தியாளர்களும் வாடிக்கையாளர்களும் சந்தையை நோக்கி குவிகிறார்கள். அதிக விலைக்கு விற்பதைவிட நியாயமான விலைக்கு அதிகப் பொருள்களை விற்பதையே தன் வணிக தத்துவமாகக் கொண்டிருக்கும் நம்ம ஊரு சந்தை, சிறுதானியங்களைப் பயிரிட்டு விவசாயிகளுக்கு விதை விற்பனை செய்வதோடு  காபியையும்  சிறுதானியங்களையும் நேரடியாக விற்பனை செய்வதற்கான முயற்சியிலும் இறங்கியிருக்கிறது.

 புரோக்கர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பழங்குடிகளின்  உற்பத்திகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கிறது, நம் சந்தை. நம் சந்தையின் பணியைப் பாராட்டி சிறந்த வேளாண் கூட்டுறவுக்கான உழவர் விருதும், ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

No Comments

Post A Comment