21 Jan பாமயன் – சிறந்த வேளாண் பங்களிப்பிற்கான உழவர் விருது
உலகில் தோன்றிய புது புது மாற்றங்கள், புதுபுது கண்டுபிடிப்புகள் , புது புது சிந்தனைகள் என அனைத்திற்குப் பின்னாலும் இருப்பது தன்னலமற்ற தனிநபர்களின் உழைப்பு மட்டுமே. . அந்த வரிசையில் 35 ஆண்டுகளாக தன் வாழ்வையே உழவுக்காக அற்பணித்தவர் தான் மதுரையை சேர்ந்த “பாமயன் என்கின்ற பாலசுப்பிரமணியன் . . .
முதுநிலை படிப்பு முடித்து பத்திரிகை துறையில் பணியாற்றியபோதும் அவர் மனம்முழுதும் சமூகத்தின் மீதே இருந்தது. . .
நவீன விவசாயம் பசி பட்டினியை போக்கியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் பக்கவிளைவுகள் எதிர்கால விவசாயத்தையும், மனித சமூகத்தையும் பெரும் சிக்கலில் கொண்டு சேர்க்குமோ என்ற அச்சம் பாமயன் அவர்களை உழவை நோக்கி சிந்திக்க தூண்டியது.
ஜப்பானில் நஞ்சில்லா உழவில் புரட்சி செய்த ஒற்றை வைக்கோல் புரட்சி நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாருடன் இணைந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று திணைக்கோட்பாடுகளையும், நஞ்சில்லா விவசாயத்தின் நன்மைகளையும் எடுத்துரைத்தார்.
முன்னத்தி ஏர், போபால் பேரழிவு, விதை அரசியல் , வேளாண் இறையாண்மை என 20க்கும் மேற்பட்ட விவசாயம் மற்றும் சூழலியல் சார்ந்த புத்தகங்கள், . . தமிழ நாடு தாண்டி ஆந்திரா , கர்நாடகா , ஒரிசா என பல்வேறு மாநிலங்களை சார்ந்த 25000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு விவசாய முறை பற்றிய பயிற்சி. . . 500 க்கும் மேற்பட்ட மாதிரி பண்ணைகள் , இந்தியாவைத் தாண்டி வெளி நாடுகளுக்கும் சென்று உழவுக்காக பேசியது என விவசாயத்திற்காகவே தன் வாழ்வை அளித்தவர் பாமயன் அவர்கள். . .
5 பேரோ 5000 பேரோ எதையும் எதிர்பார்க்காமல் கிளம்பிடுவார் . . இப்படி எண்ணற்ற கூட்டங்களில் கலந்து கொண்ட போதும், எவ்வளவு பொருளாதர நெருக்கடியில் இருந்தபோதும் அதற்காக அவர் யாரிடமும் ஒரு பைசா கூட கேட்டதில்லை. .
கொள்கை இலட்சியம் கொண்ட மனம் பணம் காசை எதிர்நோக்குவதில்லை. .
நெடுநாள் உழைப்பிற்கு பிறகு 100 பேரை ஒருங்கிணைத்து பொதிகை மலை அடிவாரத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அந்த இடத்தை பிரித்து அந்த இடத்தில் கூட்டுபண்ணை முறை சார்ந்தும் – நஞ்சில்லா உழவு முறைப் பற்றியும், பண்டைய தமிழர்களின் வேளாண் அறிவுப் பற்றியும் இளைய தலைமுறை அறிந்து கொள்ள நெடுநல் பயிற்சி பள்ளி ஒன்றும் அங்கு நடத்தி வருகிறார். .
சோதனைகளும், சவால்களும் இன்னும் தொடர்கின்றன. ஆனாலும் தன்னால் சமூகத்திற்கு ஒரு நற்பயன் விளைந்துவிடாத என்ற நம்பிக்கையில் தன் வாழ்வையே சோதனைக் கூடமாக்கி உழைத்து வருகிறார் பாமயன்.
ஒரு பத்திரிக்கையாளராய் வாழ்வை தொடங்கி – விவசாயத்திற்காக, மக்கள் நல்வாழ்வுக்காக , நஞ்சில்லா உணவுக்காக, தன் வாழ்க்கையே அற்பணித்து வரும் பாமயன் அவர்களுக்கு – சிறந்த வேளாண் பங்களிப்பிற்கான உழவர் விருது வழங்கி சிறப்பிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது உழவன் ஃபவுண்டேஷன்.
Sorry, the comment form is closed at this time.