
13 Feb மாபெரும் வேளாண் பங்களிப்பு – கலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம்.
விதை ஒன்று மண்ணில் விழுந்தால் தான் உழவுத் தொழில் என்று ஒன்று நடக்கும், அந்த விதைக்கு கூட பிறர் கையை எதிர்நோக்கும் சூழல் இன்று விவசாயிகளுக்கு ஏற்பட்டது ஏன்.? கலப்பின விதைகள் ஆக்கிரமித்து கிடக்க பாரம்பரிய விதைகள் களவு போனத ஏன் .? இப்படி பதில் கிடைக்கா கேள்விகளைக் கேட்பதை விட பாரம்பரிய விதைகளை விவசாயிகள் கையில் கொண்டு சேர்ப்போம் அதுதான் விவசாயிகளை தற்சார்புடையவர்களாக மாற்றுவதற்கான வழி என 25 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து, தமிழ் அறிஞர் வெங்கடாசலம் அவர்களால் போடப்படட விதை, இன்று கிளை விட்டு பல்கிப் பெருகி வளர்ந்து, தற்சார்பு உழவர் வாழ்வுக்கு உறுதுணையாய் உயர்ந்து நிற்கிறது காலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம் .
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கத்தில் விவசாயமே பிரதான தொழில், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக உள்ளூர் விதைகளுக்கான மாநாட்டை கலசபாக்கத்தில் நடத்தியது காலசப்பாக்கம் பாரம்பரிய விதைகள் மையம்.
இது அப்பகுதி விவசாயிகளுக்கு பாரம்பரிய உள்ளூர் விதைகள் பற்றியும், இயற்கையோடு இயந்த தற்சார்பு விவசாய முறையையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஊட்டியது.
பல இளம் தலைமுறையினர் இந்த தற்சார்பு விவசாய முறையில் கை கோர்க்க தொடங்கினர். ஆரம்பத்தில் விவசாயிகள் மத்தியில் நிலவிய எதிர்மறை எண்ணத்தை அடித்து நொறுக்கும் விதமாக இவ்வமைப்பே நேரடியாய் தற்சார்பு இயற்கை விவாய சாகுபடியில் இறங்கியது. விதை முதல் விற்பனை வரை சுயமாய் விவசாயிகள் இயங்கும் வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து அதில் வெற்றி அடைய செய்து காட்டியது.
தலைமுறை தலைமுறையாய் விவசாயம் செய்து வரும் உழவர்களின் உழுதொழில் அறிவினையும், பன்னாட்டு விவசாய வல்லுனர்கள் படிப்பறிவையும் இணைக்கும் பாலாமாக இவ்வமைப்பு செயல்பட்டு , பாரம்பரியம் மாறா நவீனத்தை கைக்கொள்ளும் உழவு முறைகளை செயல்படுத்தி வருகிறது.
விதைத் திருவிழா , பாரம்பரிய உணவுத்திருவிழா என நிறைய இயற்கை சார் விழாக்களை நடத்தி மக்களிடையே இயற்கை உணவு சார்ந்த எண்ணத்தையும் விதைத்து வருகிறது கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையம்.
இதுவரை 320 க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் மண்ணில் இருந்து மறையாமல் மீட்டுள்ளது இவ்வமைப்பு. அதில் 26 ரகங்கள் திருவண்ணாமலை சுற்றுவட்டார ஊரகப்பகுதி விதைகள்.
ஒழுங்குமுறையற்று இயங்கி வந்த விற்பனை சந்தைகளை 2017 க்கு பின் ஒரு ஒழுங்கு முறைக்குள் கொண்டுவந்துள்ளனர். அதன் பயன் விற்பனை வாய்ப்பு பெருகியது புது புது விவசாயிகளை தற்சார்பு இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்த்தியது.
கடந்த 10 ஆண்டுகளாக மாதா மாதம் 5 ஆம் தேதி அன்று விவசாயிகள் ஒன்று அடுத்தகட்ட செயல்திட்டம் பற்றி பேசுவதை வழமையாக வகுத்துக் கொண்டுள்ளனர். விதை முதல் விற்பனை வரையிலும் , விளைச்சல் முதல் அதற்கான விலை வரையிலும் அனைத்தும் விவாதிக்கப்பட்டு ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விற்பனை சங்கிலி வலிமையாக இருந்தால் தான் ஒரு விவசாய முறை உயிர் பெற்று இருக்கும். பல இயற்கை விவசாயிகள் தோற்கும் இடம் இதுதான். தற்சார்பு இயற்கை விவசாயிகளுக்கான விற்பனை சங்கிலியை உருவாக்கி அதன் கன்னி அறுபடாமல் இன்று வரை காத்து , ஊர் கூடி தேர் இழுப்போம் ஒன்றுபட்டு விவசாயம் காப்போம் என இயங்கி வருகிறது கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையம்.
விவசாயத்தின் மீதிருந்த ஒவ்வாமையை தனது நேர்த்தியான ஒழுங்கு முறை தற்சார்பு விவசாய முறைகளால் அடித்து நொறுக்கி, பாரம்பரிய உள்ளூர் விதைகளை மீட்டெடுத்து இன்று பல நூறு விவசாயிகளை ஒன்றிணைத்து இலாப நோக்கில்லாமல் செயல்பட்டு வரும் கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்திற்கு மாபெரும் வேளாண் பங்களிப்புக்கான உழவர் விருதும், ரூபாய் 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
Sorry, the comment form is closed at this time.