நீர் நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு – திருமிகு. சியாமளா
921
post-template-default,single,single-post,postid-921,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

நீர் நிலைகளை மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு – திருமிகு. சியாமளா

மாரி யல்லது காரியமில்லை இவ்வுலகில். . அதுவும் உழுதொழிலுக்கு நீர் என்பது உடலில் ஓடும் குருதியை போல. . அதை உணர்ந்தே நம் முன்னோர்கள் வழிந்தோடி கடல் கடக்கும் நீரை, ஏரி, குளம், குட்டை , கண்மாய் என அனைத்து வழிகளிலும் சேமித்து உழவுக்கு உயிர் ஊட்டி வந்தனர். ஆனால் இன்றோ வேர்களை வெட்டிய மரமாய் நீர் வழித்தடத்தை இழந்த பல ஏரி குளங்கள் உயிரற்ற சடலாமாய் கிடக்கின்றன.

நதியை பெண்னோடு ஒப்பிடுவர், மழையை பெண்ணுக்கு உவமையாக்குவர், நீருக்கும் பெண்ணுக்குமான தொடர்பு தொப்புள் கொடி உறவு, பிள்ளை பசியைக் கண்டு பொறுக்காத தாய் போல வறண்டு கிடந்த நீர்நிலைகள் கண்டு அதை மீட்டெடுக்க எண்ணி, அதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து, 30 க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இன்று மீண்டும் உயிர் பெற்று விவசாயம் வளம் பெற காரணமாக இருப்பவர் தான் மதுரை ஊசிலம்பட்டியை சேர்ந்த சியாமளா..

B. com , Mphil முடித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி கணக்கராக பணி. பத்து வருடங்களுக்கு முன் இவருக்கு ஏற்பட்ட எதிர்பாரா விபத்து தான் இன்று ஆக்கீரமிப்பு என்ற விபத்தில் சிக்கிய பல்வேறு ஏரி குளங்களை மீட்டுருவாக்கம் செய்து வருகிறது.

ஒரு ஏழை உழவரின் கண்ணீரில் கரைந்த இவரது இளகிய மனம் இனி தன் வாழ்நாளை உழவர் நலனுக்காகவே ஆர்ப்பணிப்பது என்ற முடிவை எடுக்க தூண்டியது. மனம் உண்டு ஆனால் செயல்படுத்தும் வழி என்ன.? என உழவர்களையே நேரில் சந்தித்து அவர்கள் குறை கேட்டறிந்ததில் அனைவரும் சொன்ன ஒரே பதில் நீர். . .

நீர் இருந்தால் உழவர் வாழ்வு செழிக்கும். சரி அந்த நீருக்கு வழி என்ன ? என யோசித்து நீர் வழித்தடத்தை மீட்டுருவாக்கம் செய்வது என்ற உயரிய முன்னெடுப்பை மேற்கொண்டு, கிராம மக்களிடமும் விழிப்புணர்வு ஊட்டி, சமூக ஆர்வலர்களோடும் கை கோர்த்து நீர்நிலைகளை மீட்டு இன்று பல்லாயிரம் விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சியை பாய்ச்சியுள்ளார் சியாமளா.

மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் தன் பாதையை இழந்து பாலையாய் கிடந்த பல நீர்நிலைகள் இன்று நீர் நிறைந்து கட்சியளிக்கின்றன. நீர் நிறைந்தால் உழவர் மனம் நிறையும் என்பதற்கு சாட்சி அப்பகுதி உழவர்களின் மகிழ்ச்சியான முகங்கள். .

விதை விதைத்தால் அதன் நடுவே களையும் முளைப்பதை போல நாற்காரியம் செய்ய முற்படுகையில் அதை ஆரம்பத்திலேயே முடக்க சதிகாரர்களும் சதி செய்வர். அவர்கள் செய்த முயற்சியையும், உருட்டல் மிரட்டல்களையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு தன் நீர்வழி பாதை மீட்பில் இருந்து தடம் மாறாமல் இன்றும் பயணித்து வருகிறார் சியாமளா.

ஏரிகாத்த அம்மன் என ஊர்ப்புற தெய்வங்கள் பல உண்டு. . . இன்று ஏரி காக்கும் அம்மாவாக இருந்து பல்வேறு ஆக்கிரமிப்பு நீர்நிலைகளை மீட்டெடுத்து உழவுக்கு உயிர் ஊட்டுவது தான் தன் வாழ்நாள் பணி என வாழ்ந்துவரும் சியாமளா அவர்களின் சேவையை பாராட்டி நீர் நிலைகளை மீட்டெடுத்தலுக்கான உழவர் விருதும், ரூபாய் 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது..

No Comments

Sorry, the comment form is closed at this time.