சிறந்த பெண் வேளாண் தொழில் முனைவோர் – திருமிகு.  சுகந்தி
916
post-template-default,single,single-post,postid-916,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

சிறந்த பெண் வேளாண் தொழில் முனைவோர் – திருமிகு.  சுகந்தி

வாழை குலை தள்ளிய பின் பயனற்று மண் தின்று போகும் வாழை, அப்படிப்பட்ட அந்த வாழையைக் கொண்டே பல பெண்களின் வாழ்வை பயனுள்ளதாக மாற்றிக் காட்டியிருக்கிறார் நாமக்கல் மோகனூரைச் சேர்ந்த தொழில் முனைவோர் சுகந்தி.

திருமணம் என்ற தடையால் தன் படிப்புக் கனவை தொலைத்த பல கோடி தமிழ்ப்பெண்களுள் சுகந்தியும் ஒருவர். பள்ளிப்படிப்பை முடித்தவுடனே பிடிக்காத திருமணம்.

ஆனால் அதோடு தன் வாழ்வு முடிந்துவிட்டது என வீட்டில் முடங்கவில்லை. தன் தடைகளை தகர்த்தெறிய வேண்டும் என்றால் கல்வி மட்டுமே ஒரே தீர்வு என முடிவு செய்து படிப்பை தொடர்ந்தார். தொலை தூர கல்வி மூலம் BA முடித்து அதோடு நின்றுவிடாமல் MA பட்டமும் பெற்றார்.

கல்வி ஒருவருக்கு அறிவை மட்டும் கொடுப்பதில்லை அகத்தை திறந்து சமூகத்தை அக்கறையோடு பார்க்கும் மனதையும் கொடுகிறது. தன் வாழ்வில் கஷ்டங்களையும் சிரமங்களையும், பிடிக்காத திருமணம் என்ற சிறைவாசத்தையும் கடந்து வந்த சுகந்தி, கஷ்டப்படும் பெண்களின் வாழ்வில் சிறு மாற்றத்தையாவது கொண்டுவர வேண்டும் என எண்ணி அவ்வண்ணமே தன் வாழ்வை அமைத்துக் கொண்டார்.

அப்படி மக்களையும் சமூகத்தையும் தினந்தோறும் சந்திக்கும் பணி வாய்ப்புகளையே அவர் தேர்ந்தெடுத்தார். பெண்களையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்கள் வாழ்வினையும் , அவர்களுக்கான பிரச்சனைகளையும் அருகில் இருந்து நேரடியாய் கண்டுணர்ந்தார்.

தான் பார்ப்பதை வெறும் வேலை என மட்டும் எண்ணாமல், கூலி வேலை செய்து கஷ்டப்படும் பெண்களின் வாழ்வை, விவசாயக்கழிவுகளைக் கொண்டு எப்படி மீட்பது என யோசித்து அதற்கான வழியையும் கண்டறிந்தார். அதில் அவருக்கு கிடைத்த வெளிச்சம் தான் வாழைக்கழிவை மதிப்புக்கூட்டு செய்து வாழை நார் பொருட்கள் உற்பத்தி செய்வது.

சுகந்தியின் இந்த தொழில் முயற்சி நாமக்கல் சுற்றுவிட்டார விவசாயிகளுக்கு, அதுவரை பயனற்று வீணாய் போன வாழை மரங்களைக் கூட காசாக்கி சிறு இலாபம் பார்க்க செய்தது. மறுபுறம் நிரந்தர வேலையின்றி தவித்த பெண்களுக்கு புது தொழில் வாய்ப்பும் , வேலைவாய்ப்பும் கிட்டியது.

தொழிலில் வீழ்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஒரு கட்டத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட தொழில் நசிவதை காண சகியாமல், தான் பார்த்துவந்த வேலையை கூட உதறி விட்டு தொழிலை மீட்டெடுத்து தற்போது பல கஷ்டப்படும் பெண்களுக்கு வேலை கொடுத்து வருகிறார் சுகந்தி.

4 பெண்களோடு ஆரம்பிக்கப்பட்ட தொழில் தற்போது 15 பெண்களை கொண்டு 100 வகையான வாழை நார் பொருட்கள் செய்யும் வகையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுகந்தி நடத்தும் நிறுவனத்தில் முதலாளி, தொழிலாளி என்ற பேதம் இல்லை, பாசம் பிணைக்கப்பட்ட அன்பின் கூடாய் தொழில் கூடம் திகழ்கிறது.

சிறு தொழில் நிறுவனம் தான் அவருடையது, அங்கு தொழிலாளர் மீது அவர் காட்டும் அக்கறையும், தொழிலாளர் உரிமைக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவமும், இன்றைய கார்பரேட் பெரு நிறுவனங்கள் அவரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று . .

தான் வாழ்வில் தள்ளப்பட்டாலும் அதிலிருந்து மீள வேண்டும் என்ற உறுதியோடு கல்விக் கயிற்றைப் பிடித்து மேலேறி இன்று பல பெண்கள் சுய சம்பாத்தியம் பெற வழிவகை செய்துவரும் சுகந்தி அவர்களுக்கு சிறந்த பெண் வேளாண் தொழில் முனைவோருக்கான உழவர் விருதும், ரூபாய் 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

No Comments

Sorry, the comment form is closed at this time.