கால்நடைத் துறையில் சிறந்த பங்களிப்பு – கால்நடை மருத்துவர். திருமிகு. விஜயகுமார்.
901
post-template-default,single,single-post,postid-901,single-format-standard,bridge-core-3.1.5,qode-page-transition-enabled,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-child-theme-ver-1.0.0,qode-theme-ver-30.3.1,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.5,vc_responsive

கால்நடைத் துறையில் சிறந்த பங்களிப்பு – கால்நடை மருத்துவர். திருமிகு. விஜயகுமார்.

உழவர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது கால்நடை வளர்ப்பு… அவர்கள் நொடிந்து ஒடிந்துவிடாத படி, தாங்கிப் பிடிக்கும் உயிருள்ள ஊன்றுகோல்கள் தான் ஆடு மாடு கோழிகள். பட்டி ஆடுகளும் பால் கறவை மாடுகளும் தான் இன்று பல உழவர் குடும்பங்களை பசியாற செய்து கொண்டுள்ளன.

கால்நடைகளுக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் ஒட்டு மொத்த உழவர் குடும்பமே நொடிந்து போகும். அப்படிப்பட்ட சூழலில் அலைக்கும் அபயகுரல்களுக்கு இரவு பகல் பாராமல் ஓடி வந்து மருத்துவ உதவி செய்து உழவருக்கு உறுதுணையாய் இருந்து வருபர் தான் கால்நடை மருத்துவர் விஜயகுமார்.

35 வருடகால மருத்துவப்பணியில் அவர் தனது குடும்பத்தோடு செலவிட்ட நேரத்தை விட கால்நடைகளோடு செலவிட்ட நேரேமே அதிகம். காட்சிக்கு எளியவர், கடும் செல்லை தவிர்ப்பவர் , இல்லாதவருக்கு இயன்றதை செய்யும் ஈகை குணத்தவர் என அவரை 30 வருடங்கள் அருகில் இருந்து பார்த்த திண்டுக்கல் E. சித்தூர் உழவர்கள் பாராட்டி மகிழ்கின்றனர்.

அவசர உதவிக்கு ஓடி வரும் மருத்துவர்களே அரிதான சூழலில் மருத்துவம் செய்ய சென்ற இடத்தின் ஏழ்மை நிலை கண்டு பசுமாட்டை பராமரிக்க தனது கை காசை எடுத்துக் கொடுத்தார் கால்நடை மருத்துவர் என்றால் நம்ப முடிகிறதா ஆனால் அதை தனது சேவையின் ஒருபகுதியாகவே செய்து வந்துள்ளார் கால்நடை மருத்துவர் விஜயகுமார்.

தற்போது கால்நடை இயக்குனராக இருக்கும் விஜயகுமார் அவர்கள் மருத்துவம் பார்ப்பதில் மட்டும் கெட்டிக்காரர் அல்ல கால்நடை துறை சார்ந்த ஆராய்ச்சிகளிலும், துறை சார்ந்து எழும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை ஆய்ந்து கொடுப்பதில் வல்லவர்.

பால் மாடுகளை வைத்து பண்ணையை பாராமரிப்பது என்பது சிரமமான காரியம் தான். அடிக்கடி நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பசுமாடுகள் பாதிப்படைந்து தொழிலே நசியும் சூழல் உண்டாகும். அப்படியான நிலைமையை எப்படி எதிர்கொள்வது எவ்வாறெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் நோய் வராமல் தடுத்து மாடுகளை பாதுகாக்க முடியும் என்றெல்லாம் பண்ணையாளர்களிடம் பொறுமையாக விளக்கி அவர்கள் சிறப்பாக பண்ணை நடத்த காரணமாக இருந்துள்ளார் கால்நடை மருத்துவர் விஜயகுமார். ஆள் இல்லா காட்டில் நடு இரவில் சென்று மருத்துவம் பார்க்கும் சூழலிலும் தயங்காது சென்று மருத்துவம் பார்ப்பதை தன் கடமையாக்கிக் கொண்டவர்.

காலை 6 மணி முதலே தொடங்கும் மருத்துவ பணி அதற்கிடையே சாப்பாடு மீண்டும் கால்நடைகளுக்கு மருத்துவம் என கால்நடைகளோடே கழிந்தோடும் அந்நாள். இந்த பணி மீதான அவரது காதல் அவர் குடும்பத்தோடு செலவிடும் நேரங்களை அபகரித்தாலும் அவரது சூழ்நிலையையும் மக்கள் அவர் மீது கொண்ட நன்மதிப்பையும் எண்ணி மகிழ்வோடு குடும்பத்தை நடத்திவருக்கிறார் திருமதி. விஜயகுமார்.

AC அறைக்குள் அமர்ந்து வேலை பார்க்கும் சொகுசான பணி அல்ல.. காடும், மலையும், கடும் குளிரும், பனியும் எதுவென்றாலும் அவசரம் என்றால் நேரம் காலம் பார்க்காமல் ஓடிச்சென்று மருத்துவம் பார்க்கும் சவாலான பணி. ஆனால் அதை வெறும் மருத்துபணி என்று மட்டும் கருதாமல் தன்னால் ஆன இயன்ற உதவிகளை செய்து, விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் பொருளாதார ரீதியாக மேம்பட வழிகாட்டியாய் இருந்து, ஒரு சேவை மனப்பான்மையோடு 35 ஆண்டுகாலம் இப்பணி செய்து வரும் கால்நடை இயக்குனர், கால்நடை மருத்துவர் திரு. விஜயகுமார் அவர்களின் சேவையை பாராட்டி, கால்நடை துறையில் சிறந்த பங்களிப்புக்கான உழவர் விருதும், ரூபாய் 2 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டது..

No Comments

Sorry, the comment form is closed at this time.