01 Feb உழவர் விருதுகள் – 2023 – திருமிகு.வெற்றிவேல், உழவர் பூமி.
திருமிகு.வெற்றிவேல், உழவர் பூமி – கால்நடை துறையில் சிறந்த பங்களிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை சேர்ந்த வெற்றிவேல், ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தில் இருந்து மேலெழுந்து வந்தவர். பள்ளிக்காலத்திலேயே அப்பாவை இழந்து, பெரும் வறுமையில் கூலி வேலை செய்த அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவர். காலை கல்லூரி இரவு முழுவதும் கிடைத்த வேலைகள் என கடும் சிரமங்களுக்கு மத்தியில் பட்டப்படிப்பு முடித்து ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இணைந்த வெற்றிவேலை, நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புத்தரும் ஒரு பசுமைத் தொழில் முனைவோராக மாற்றியிருக்கிறது காலம்.
படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் பொருளீட்ட வேண்டும் என்ற கனவோடு இருந்தவரின் வாழ்க்கையை மாற்றியது, 2017 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தன் வெளிநாட்டு கனவை கைவிட்டு இம்மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் தன் வாழ்வை மாற்றிக் கொள்ள முடிவெடுத்த நேரத்தில் தோன்றியது மக்களுக்கு கலப்படமற்ற பாலை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம். இந்த எண்ணத்துடன் தன் தேடலை தொடங்கியவருக்கு காத்திருந்தன பெரும் அதிர்ச்சிகள்.
வெளியில் இருந்த போது கலப்படமான பால் நுகர்வோர்க்கு செல்கிறது என்று மட்டுமே அறிந்திருந்தவருக்கு தன் தேடலை தொடங்கிய பிறகுதான் இங்கு விவசாயிகள பல பால் கம்பெனிகளையும், தனி நபர்களையும் நம்பி நம்பி ஏமாந்திருக்கிறார்கள் என்ற உண்மை புலப்படுகிறது.
இவ் உண்மையை அறிந்தப்பிறகு, நுகர்வோருக்கு சுத்தமான பால் … விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலை இவ்விரண்டையும் தன் இலக்காக நிர்ணயித்தார்.
பெருவணிகர்கள் கவனம் செலுத்தாத குக்கிராம கால்நடை வளர்ப்போரைக் கண்டடைந்து, பால் சேகரிக்க முயன்ற வெற்றிவேலை விவசாயிகள் அவ்வளவு எளிதில் அங்கீகரிக்கவில்லை. இடைவிடாத இவரது அலைச்சலாலும் முயற்சியாலும், இரண்டு விவசாயிகள் மட்டும் முதலில் கைகொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த நம்பிக்கையில் தொடங்கியது முதல் பால் வணிகம், ஐந்தே ஆண்டுகளில் ஆல் போல் தளைத்து 1800 விவசாயிகளையும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களையும் வாடிக்கையாளர்களாக மாற்றியிருக்கிறார். இந்த 1800 விவசாயிகளும் சிறு குறு விவசாயிகள் என்பதுதான் வெற்றிவேலுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள மாபெரும் வித்தியாசம்.
கொரானா ஊரடங்கு காலங்களில் பெரும் பெரும் பால் நிறுவனங்களே பாலை கொள்முதல் செய்யாத போது, கால்நடையை மட்டுமே நம்பி வாழும் விவசாயிகளிடமிருந்து ஒருநாளும் தவிர்க்காமல் பாலை கொள்முதல் செய்த வெற்றிவேல், சரியான நேரத்தில் அதற்கான பணத்தையும் அளித்து அவர்கள் கடனாளியாவதிலிருந்து காப்பாற்றியுள்ளார்.
கிராமங்களில் சுயஉதவிக்குழுப் பெண்கள் பால் சேகரித்துத் தர, சூழலைப் பாதிக்காத பேட்டரி வாகனங்கள் மூலம் அவற்றைத் திரட்டி தனது பிராசஸிங் யூனிட்டுக்குக்கொண்டு வருகிற வெற்றிவேல், தன் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் பெயர் ‘உழவர் பூமி’.
வெற்றிவேலின் முனைப்பையும் உழைப்பையும் கண்டு ஒரு தனியார் முதலீட்டு நிறுவனம் கைகோர்க்க, மதுராந்தகம் அருகிலுள்ள நெசப்பாக்கத்தில் இவர் அமைந்துள்ள processing unit-ல் ஒரு நாளைக்கு 12,000 லிட்டர் பால், கண்ணாடி பாட்டிலில் பேக் செய்யப்படுகிறது.
சந்தை விலையைவிட விவசாயிகளுக்கு அதிகமான விலை கொடுப்பதோடு அதை வருடம் முழுவதும் தொடர்ந்து அளித்து எந்த இழப்பையும் விவசாயிகள் மீதும் நுகர்வோர் மீதும் சுமத்தாமல் நாணயமிக்க வணிகம் செய்வதற்காகவே வெற்றிவேலுவைக் கொண்டாடலாம்.
இன்று உழவர் பூமியின் பாலை 40 க்கும் மேற்பட்ட டீலர்கள் சென்னை முழுவதும் விநியோகிக்கிறார்கள். 150க்கும் மேற்பட்டோர் வெற்றிவேலுவின் உழவர் பூமியால் வாழ்க்கை பெற்றிருக்கிறார்கள்.
பால் தரும் விவசாயிகளுக்கு செலவில்லாத வைத்திய முறைகளைக் கற்றுதரும் வெற்றிவேல், பாட்டிலில் பாலை அடைப்பதன் மூலம் ஆண்டுக்கு 8 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகாமல் தடுக்கிறார். அடுத்த இரண்டாண்டுகளில் 20 ஆயிரம் விவசாயிகள் 2 லட்சம் நுகர்வோர்கள் என பேரிலக்கு நிர்ணயித்து பசுமை சேவையாற்றும் வெற்றிவேலையும் அவரது உழவர் பூமியையும் போற்றி “கால்நடைத்துறையில் சிறந்த பங்களிப்பு” க்கான உழவர் விருதும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி வழங்கி கெளரவிக்கப்பட்டது.
No Comments