11 Mar உழவர் விருதுகள் – 2022 – சரோஜா
சரோஜா- சிறந்த பெண் விவசாயி
விவசாயி என்பது ஆண்பாலைக் குறிக்கும் சொல்லாடலாகவே தமிழகத்தில் இருந்து வருகிறது. அந்த கற்பிதத்தை மாற்றி எழுதியிருக்கிறார் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த 53 வயதான சரோஜா. தான் மட்டுமின்றி தன்னைச்சுற்றியிருக்கும் விவசாயிகளையும் கைபிடித்து தூக்கி நிறுத்தியதில் தனித்துவம் பெறுகிறார் சரோஜா.
அம்மா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா என பல உறவுகளை புற்றுநோய் பாதித்து உயிர் பறிக்க மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளான சரோஜா, அதற்கான காரணங்களை அலசத் தொடங்கியிருக்கிறார். உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே புற்றுநோய் பரவலுக்கு முக்கியக்காரணம் என்பதை உணர்ந்து அதற்கு மாற்று குறித்து சிந்தித்த சரோஜாவுக்கு நம்மாழ்வாரின் புத்தகங்கள் தீர்வுக்கான பாதையைக் காட்டின. மகன்களோடு சென்று நம்மாழ்வாரைச் சந்தித்து நஞ்சில்லா உணவு குறித்து கற்றரிந்து வந்து சொந்த ஊரில் வேளாண்மை செய்யத் தொடங்கினார் சரோஜா.
வேளாண்மை சந்தைக்கானதல்ல… உணவுக்கானது என்ற உண்மை சரோஜாவை Do Nothing Farming நோக்கி நகர்த்தியது. உணவுக்காடுகள் ஒன்றே தீர்வு என்ற நிலைக்கு வந்தடைந்த சரோஜா பத்து வருடங்களாக தான் விரும்பிய வேளாண்மையை வெற்றிகரமாகச் செய்து வழிகாட்டுகிறார். தண்ணீர் பற்றாக்குறை மிக்க நிலங்களில் மானாவாரி பயிர் செய்து மதிப்புகூட்டி விற்பனை செய்கிறார்.
உழவே செய்யாமல் ஆறு ஏக்கரில் தென்னை, பனை, அத்தி, நாவல், இலந்தை, கொய்யா, மாதுளை, சப்போட்டா போன்றவைகளை வைத்து உணவுக்காட்டை உருவாக்கியுள்ளார் சரோஜா. மிளகாய், உளுந்து, கேழ்வரகு தக்காளி என எல்லாப் பயிர்களையும் மசானாபு புகாகோவின் வழிகாட்டுதலில் உழவோட்டாத நிலத்தில் பயிரிட்டு பெரு விளைச்சல் எடுக்கிறார்ரசாயன உரங்களைக் கொட்டி அதிக விளைச்சல் எடுப்பதைவிட இயற்கை வேளாண்மையில் குறைந்த விளைச்சல் எடுத்து மதிப்புக்கூட்டி விற்று பணம் செய்யலாம் என்ற வழிகாட்டுதல் விரக்தியில் இருந்த பல விவசாயிகளுக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது.
தனக்குக் கிடைக்க அனுபவங்களை பிற விவசாயிகளுக்கும் பகிர்ந்த சரோஜா, ஐநூறு விவசாயிகளை ஒன்றிணைத்து “கரூர் முருங்கை மற்றும் காய்கறி உற்பத்தியாளர் நிறுவனம்” என்ற பெயரில் FPO ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். இந்த FPO, எண்ணெய் முதல் பிஷின் வரை முருங்கையிலிருந்து கிடைக்கும் எல்லாப் பொருட்களையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநில விவசாயிகளுக்கும் மதிப்புகூட்டல், இயற்கை விவசாயம், உழவில்லா வேளாண்மை குறித்து பயிற்சியும் ஆலோசனையும் வழங்குகிறார் சரோஜா.
ஒரு ஆண் கற்ற கல்வி குடும்பத்தைக் காக்கும். பெண் கற்ற கல்வி சமூகத்தைக் காக்கும் என்பார்கள். சரோஜா என்ற விவசாயியால் பல வேளாண் குடிகள் லாபமுள்ள விவசாயம் செய்கின்றன. வேளாண்மையின் உயிரை மீட்டு நம்பிக்கையளித்திருக்கும் சரோஜாவிற்கு சிறந்தப் பெண் விவசாயிக்கான உழவர் விருதும் ரூபாய் 1 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கொளரவிக்கப்பட்டது.
No Comments